பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க
பிள்ளைகள்
0
Comments
பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க முதலில் பிள்ளைகளுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். பள்ளிப்பாடங்கள், வரலாறு, அறிவியல், என்று பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த கேளிக்கை, கார்ட்டூன், கதைகள், போன்ற புத்தகங்களை வாங்கி கொடுத்து அவற்றை வாசிக்க சொல்லுங்கள்.
தொடக்கத்தில் பெரிய புத்தகமாக இல்லாமல் ஐம்பது பக்கங்களுக்கும் குறைவாக உள்ள சிறிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாங்கி கொடுக்காதீர்கள். ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர் அடுத்த புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள்.
பிள்ளைகள் வாசித்து முடித்த புத்தகங்களில் கதைகளில் உள்ளவற்றை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் படித்த கதைகளில் உள்ள கதாபாத்திரங்களை பற்றி நீங்களும் அவர்களுடன் விவாதம் செய்யுங்கள் அல்லது கலந்து ஆலோசனை செய்யுங்கள்.
பிள்ளைகள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் அதன் தொடர்புடைய அடுத்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள். தொடர்பில்லாத பல புத்தகங்களை வாசிக்கும் பொழுது அவர்களுக்கு வாசிப்பதில் விரக்தி ஏற்படும், ஆர்வம் குறைந்துவிடும்.
மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். இடையிடையே உலக நடப்பு, சினிமா, கேளிக்கை, போன்ற விஷயங்களையும் வாசிக்க அனுமதியுங்கள். இவற்றை பிள்ளைகளிடமிருந்து தவிர்க்க முயன்றால் பிள்ளைகளின் மனம் அவற்றின் மீதே நாட்டம் கொள்ளும்.
நீங்கள் வாசித்த நல்ல புத்தகங்களில் உள்ள முக்கியமான கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். சில காலங்களுக்கு பிறகு அவர்கள் சுயமாக வாசிக்கத் தொடங்கிய பிறகு அவர்களுக்கு நல்ல கருத்துடைய புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள்.
கதை புத்தகங்களை அதிகமாக வாசித்தால் பள்ளிப் பாடங்களில் கோட்டை விட்டுவிடுவார்கள் என்று எண்ணாதீர்கள். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் உருவாகிவிட்டால். பல வகையான புத்தகங்களை அவர்கள் வாசித்து பழகிவிட்டால். பள்ளிப் பாடங்களையும் எளிதாக வாசிப்பார்கள், எளிதாக புரிந்துக் கொள்வார்கள்.

Post a Comment