இன்றையப் பிள்ளைகள் பெற்றோர்களைவிடவும் புத்திசாலிகள்
பிள்ளைகள்
0
Comments
இன்றையப் பிள்ளைகள் பெற்றோர்களைவிடவும் புத்திசாலிகள். பெரும்பாலான பெற்றோர்கள், உனக்கு ஒன்றும் தெரியாது நான் சொல்வதைக் கேள், நான் சொல்வதை போல செய், என்று பிள்ளைகளை கட்டாயப்படுத்துவார்கள். சிறுவயது, இளம் பிள்ளை, என்ன தெரியப் போகிறது என்ற அலட்சியம் அவர்களுக்கு இருக்கும்.
பிள்ளைகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று எண்ணிக்கொண்டு, அவர்களை சுயமாக இயங்க விடமாட்டார்கள். நம்மைப் போன்ற அனுபவமும் அறிவும் பிள்ளைகளுக்கு இருக்காது என்று எண்ணிக் கொண்டும், பிள்ளைகள் தவறாக செய்துவிடுவார்கள் என்று பயந்து அவர்களின் அத்தனை விசயங்களிலும் தலையிடுவார்கள். பிள்ளைகள் தொடர்புடைய அத்தனை முடிவுகளையும் பெற்றோர்களே சுயமாக எடுப்பார்கள்.
பெரிய அல்லது முக்கியமான முடிவுகள் மட்டுமல்லாமல்; பிள்ளைகள் எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? எந்த விளையாட்டை விளையாட வேண்டும் ? எப்போது விளையாட வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? எந்த வேலைக்குப் போக வேண்டும்? என அனைத்து முடிவுகளிலும் சில பெற்றோர்கள் தலையிட்டு தங்களின் கருத்துக்களை பிள்ளைகளின் மீது திணிப்பார்கள்.
பிள்ளைகளை சுயமாக சிந்திக்கவிடாமல், அனைத்து முடிவுகளையும் பெற்றோர்களே எடுப்பதனால், வளர்ந்த பிறகு பிள்ளைகளுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறன் இல்லாமலேயே போகிறது. அவர்கள் வளர்ந்த பிறகும் மற்றவர்களை எதிர்பார்த்தே இருக்க நேரிடுகிறது.
சுயமாக முடிவெடுக்கும் திறன் இல்லாத பிள்ளைகள் வளர்ந்ததும் எளிதாக மற்றவர்கள் கூறுவதை நம்பிவிடுகிறார்கள். பலர் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். நாம் பிறரால் ஏமாற்றப்பட்ட பல நபர்களை சந்தித்திருப்போம் இதற்கு காரணம் சிந்திக்கும் திறனும் முடிவெடுக்கும் திறனும் இல்லாமல் போவதுதான்.
20 - 25 வயது வரையில் அனைத்து முடிவுகளையும் பெற்றோர்களே எடுத்துவிட்டு திடீரென சுயமாக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் போது பிள்ளைகள் திணறி போகிறார்கள். சிந்திக்க முடியாமலும், முடிவிடுக்க முடியாமலும் பலர் வாழ்க்கையில் தோற்று போகிறார்கள்.
இந்த நிலை உங்கள் பிள்ளைகளுக்கு உருவாகாமல் தவிர்க்க, உங்கள் பிள்ளைகளுடன் பேசுங்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள், சிறிய பொருளாக இருந்தாலும் எதை வாங்க வேண்டும் என்று பிள்ளைகளையே முடிவெடுக்க சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறுங்கள், ஆனால் திணிக்காதீர்கள்.
நம்மிடமும் கேட்பார்கள், நாம் சொல்வதையும் பெற்றோர்கள் மதிப்பார்கள் என்று நம்பினால் மட்டுமே நம் குழந்தைகள் சுயமாக சிந்திக்க தொடங்குவார்கள். பிள்ளைகளுக்கு சிந்தித்து செயல்படும் திறனும், சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலும் மட்டும் இருந்துவிட்டால். இந்த உலகில் வேறு எதுவும் இல்லாமல் இருந்தாலும் தன் சுய முயற்சியாலேயே வெற்றி பெறுவார்கள்.

Post a Comment