மனம்தான் மனிதனுக்கு வழிகாட்டி - 2
மனம்
0
Comments
மனம்தான் மனிதனுக்கு வழிகாட்டி. மனதின் ஆற்றலை புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணம். ஒருநாள் நான் மோட்டார் சைக்கிளில் ஒரு ஊருக்கு சென்றிருந்தேன். நான் தலைக்கவசம் அணியவில்லை என்னிடம் மோட்டார் லைசென்சும் கிடையாது. அந்த ஊரில் நான் காண சென்ற நபர் இல்லை, வெகுதூரம் வந்துவிட்டோம் மோட்டார் சைக்கிளில் வேறு எங்காவது செல்லலாம் என்று ஆசைப்பட்டு பக்கத்து ஊருக்குச் செல்ல முடிவு செய்தேன்.
பக்கத்து ஊருக்குச் செல்லலாம் என்று அந்த ஊரின் பெயரை நினைத்த உடனேயே என் மனக்காட்சியில் சில காவல்துறை அதிகாரிகள் அந்த ஊரின் எல்லையில் நிற்பதைக் கண்டேன். மனக்காட்சியில் அதை நான் பார்த்த பிறகும், நம் கற்பனையாக இருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன். ஆனால் மனதில் அந்த காட்சி தோன்றிவிட்டதால் முன்னெச்சரிக்கையாக போலீஸ்காரர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே சென்றேன். சில மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே போலீஸ் அதிகாரிகள் நிற்பதைக் கவனித்து விட்டு மோட்டார் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு என் ஊருக்கே திரும்பிவிட்டேன்.
பக்கத்து ஊருக்குச் செல்லலாம் என்ற ஆசையைத் தூண்டியது எனது புறமனம். அந்த ஊர் எல்லையில் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது எனது ஆழ்மனம்.
அன்று ஆழ்மனதைக் கவனித்ததால் ஒரு சிக்கலில் இருந்து தப்பித்து விட்டேன். என் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் வழிகாட்டுதலின்படி பல பிரச்சனைகளிலிருந்து தப்பித்து இருக்கிறேன். அதைப்போலவே எனக்குத் தெரியாதா என்ற அகம்பாவத்தால், ஆழ்மனதின் வழிகாட்டுதலை உதாசீனப்படுத்திவிட்டு பல சிக்கல்களிலும் மன வேதனைகளிலும் சிக்கி இருக்கிறேன்.

Post a Comment