ஜாதகம், ஜோதிடம், எண் கணிதம், நாடி ஜோதிடம்
ஜாதகம், ஜோதிடம், எண் கணிதம், நாடி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், குறிகேட்டல், மைப் போட்டு பார்த்தல், என பலவகைகளில் மனிதர்கள் தங்களின் வாழ்க்கைக்கும் பிரச்சனைகளுக்கும் விடை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜோதிடங்கள் மூலமாக மனிதனின் எதிர்காலத்தை கணித்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஒரு மனிதனின் பிறந்த நேரம், காலம், லக்னம், நட்சத்திரம், போன்றவற்றை வைத்து. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் கிரக அமைப்பைக் கொண்டு அவனுடைய குணாதிசயங்களையும், அவன் சிந்திக்கும் முறைகளை மட்டுமே கணிக்க முடியும்.
இவ்வாறான கிரக அமைப்பு இருந்தால் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும், சிந்தனை இப்படித்தான் இருக்கும் என்பதை மட்டுமே ஜாதகம், ஜோதிடம், எண் கணிதம் போன்றவற்றில் கணிக்க முடியும். தன்னுடைய குணாதசியங்களைக் கொண்டு அவன் எவ்வாறான வாழ்க்கையை அமைத்துக் கொள்வான் என்பது பெரும்பாலும் தனிமனிதனின் முடிவாகத்தான் இருக்கும்.
மற்றபடி பிறந்ததில் இருந்து இறப்பு வரையில் ஒரு மனிதனின் வாழ்க்கை இவ்வாறாகத் தான் அமையும் என்பதையெல்லாம் எவராலும் கணிக்க முடியாது. ஒரு காலத்தில் உண்மையாக இறைத் தன்மை உடைய ஜோதிடர்கள் இருந்தார்கள் என்பது உண்மையான ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். அவர்கள் ஒரு மனிதனின் ஜாதகத்தை பார்க்கும்போது இவர் வாழ்க்கை இப்படித்தான் அமையும் என்று கணித்து கூறக் கூடிய ஆற்றலை பரம்பரை பரம்பரையாக பெற்றிருந்தார்கள்.
எப்போது மனிதர்கள் பணத்தை குறிக்கோளாக கொண்டும், ஜோதிடத்தை ஒரு தொழிலாக பார்க்கத் தொடங்கினார்களோ; அவர்கள் அந்த இறைத் தன்மையை இழந்து விட்டார்கள். இப்போது அவ்வாறு துல்லியமாக கணிக்கக்கூடிய திறமை உடையவர்கள் காண்பது மிக அரிதான விஷயம் ஆகும். நான் அவ்வாறான ஒருவரை சிறுவனாக இருந்த போது பார்த்திருக்கிறேன். இருபது வருடங்கள் கழித்து நடந்த விசயங்களை முன்கூட்டியே அவர் கணித்து எழுதிக் கொடுத்திருந்தார்.
கிரக அமைப்பு அல்லது பிறந்த நேரம் போன்றவை ஒரு மனிதனின் குணாதிசயங்களை மட்டுமே நிர்ணைக்கக் கூடியவை. அது மட்டுமின்றி அவற்றின் ஆதிக்கம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் பத்து விழுக்காடு மட்டுமே உள்ளது. உதாரணத்திற்கு சொல்வதானால் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் வாழ்நாள் முழுமைக்கும் சில விசயங்கள் ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டன, அவற்றை யாராலும் மாற்ற முடியாது.
சில விஷயங்கள் மனிதர்களுக்கு தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பாக வழங்கப்படும். அதை அவர்கள் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும், தேவைக்கேற்ப மாற்றி கொள்ள முடியும். சில விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கும் இயற்கையினால் நிர்ணயிக்கப்படுகின்றன.
மனித வாழ்க்கையில் பத்து விழுக்காடு மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஜாதகத்தைப் பார்த்து பயந்து உங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்ளாதீர்கள்.
ஆயிரம் கோயில், மசூதி, சர்ச்சை ஏறி இறங்கினாலும் யாருடைய பசியும் தீராது. சாப்பிட்டால் மட்டுமே பசி தீரும் இதுதான் இயற்கையின் அமைப்பு. இறைவனின் படைப்பை புரிந்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை வாழ்வதற்காகவே இறைவன் படைத்திருக்கிறான். வாழ வேண்டிய, வாழக்கூடிய, வாழத் தேவைப்படும், அனைத்து திறமைகளுடன் தான் மனிதர்களை இறைவன் படைத்திருக்கிறான்.

Post a Comment