மனம்தான் மனிதனுக்கு வழிகாட்டி -1
மனம்
0
Comments
மனம்தான் மனிதனுக்கு வழிகாட்டி. மனிதனுக்கு இருப்பது ஒரு மனம்தான், ஆனால் அந்த மனம் செயல்படும் நிலைகளையும், தன்மைகளையும், வைத்து அதை புறமனம், நடுமனம், மற்றும் ஆழ்மனம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். புறமனம் என்பது நம்மோடு அனுதினமும் பேசிக்கொண்டும் சில நேரங்களில் உளறிக் கொண்டும் இருக்கும் பகுதி. நடு மனமானது ஒரே விசயத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டும், நினைத்துப் பார்த்துக் கொண்டும் இருக்கும் பகுதி. ஆழ்மனமானது தெய்வீகத் தன்மை உடையது, அது அமைதியாகவே இருந்து முக்கியமான மற்றும் அவசர நேரங்களில் மட்டும் நம்முடன் தொடர்பு கொள்ளும் பகுதி.
புறமனம் தனது ஆசைகளையும் கட்டளைகளையும் மாற்றிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு பழம் வாங்க வேண்டும் என்று ஆசை தோன்றினால் வெளி மனமானது, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, என்று பார்க்கும் பழங்களின் மீதெல்லாம் ஆசை கொள்ளும், அதை வாங்கத் தூண்டும்.
அதே நேரத்தில் நடுமனம் செயல்பட்டால். ஏதாவது ஒரு பழத்தைக் குறிப்பிட்டு அதை வாங்கத் தூண்டும். மீண்டும் மீண்டும் அந்தப் பழத்தின் நன்மைகளையும், தேவைகளையும் குறிப்பிட்டு, அதன் நினைவையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். ஒரே பழத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துமே ஒழிய மாற்றி மாற்றி பல பழங்களின் மீது ஆசையை உருவாக்காது.
அதே வேளையில் ஆழ்மனம் செயல்பட்டால், நம் உடலுக்கு நன்மையான, தேவையான, ஒரே ஒரு பழத்தின் பெயரை உச்சரிக்கும், அல்லது அந்தப் பழத்தின் காட்சியை மனதில் உருவாக்கும் அவ்வளவுதான். ஆழ்மனமானது ஒரே ஒருமுறை சொல்லும் அல்லது ஒரே ஒருமுறை காட்சியாகக் காட்டும், அதற்கு மேல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தாது. ஆழ்மனம் பேசும்போது நாம் தெளிவுடன் கவனிக்காமல் விட்டுவிட்டால், மிக முக்கியமான நன்மையான விசயங்களை நாம் இழந்துவிட நேரிடும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஆபத்தான நேரங்களிலும் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர ஆழ்மனம் தீர்வுகளைக் கொடுக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில் ஆழ்மனதின் கட்டளைகளையும் பரிந்துரைகளையும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். சிலர் புறமனதில் உருவாகும் எண்ணங்களை வைத்து கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்பதைப் போல் கற்பனை செய்துகொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

Post a Comment