உணவு எளிதில் ஜீரணமாக சில வழிமுறைகள்
அஜீரணம்
0
Comments
உணவு எளிதில் ஜீரணமாக சில வழிமுறைகள். சிலர் மதிய உணவை உட்கொண்ட பின்னர் உணவு ஜீரணம் ஆகாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக விருந்துகளில் உணவு உண்டவர்களும், அதிகமாக உணவு உண்டவர்களும், உணவை ஜீரணிக்க முடியாமலும் மூச்சுவிட முடியாமலும் சிரமப்படுவார்கள். இவ்வாறு சிரமப்படும் சிலர், சோடா, செவனப், பெப்சி, கோலா, லெமன் ஜூஸ், பழ ஜூஸ், இஞ்சி சாறு, அல்லது டீ அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.
உணவை உட்கொண்ட பின்னர் இனிப்பான பானங்களை அருந்தினால் மட்டுமே அவர்களின் வயிறு லேசாக இருப்பதாக உணர்வார்கள். இல்லையென்றால் வயிற்றில் ஜீரணம் நடக்காததைப் போன்றும், வயிறு கனப்பதைப் போன்றும், மூச்சுவிட சிரமப்படுவதைப் போன்றும் உணர்வார்கள். உண்மையில் அவர்களின் ஜீரண மண்டலம் பலவீனமாக உள்ளது அதனால்தான், உணவு உட்கொண்ட பின்னர் உறக்கம் உண்டாவது, சோர்வு உண்டாவது, வயிறு பாரமாக இருப்பது, வயிறு உப்புசம், மூச்சுவிட சிரமம், போன்று பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட செரிமானக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவியது அவர்கள் அருந்திய பானங்கள் அல்ல, மாறாக அவற்றில் கலந்திருக்கும் இனிப்புச் சுவையே. செரிமானம் முழுமையாக நடைபெற இனிப்புச் சுவை மிகவும் அவசியமானது. அதனால்தான் நம் முன்னோர்கள் உணவு வேளைகளுக்கு முன்பாக பழங்களை உட்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
முறையாக ஜீரணமாகாத உணவுகள் தான் வயிற்றிலும் குடலிலும் தேங்கி பல நோய்களை உருவாக்குகின்றன. செரிமானம் முறையாக நடைபெற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
1. பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள் அதுவும் பசிக்கு தகுந்த அளவோடு சாப்பிடுங்கள்.
2. உங்களுக்கு எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவுகளையும் உடலுக்கு ஒத்துப் போகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிடுங்கள்.
3. உணவை நன்றாக மென்று விழுங்குங்கள்.
4. சாப்பிடும்போது உணவில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
5. சாப்பிடும் போது அதிகமாக தண்ணீர் அருந்தாதீர்கள்.
6. உணவு உட்கொண்ட பிறகு 30 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் அருந்த வேண்டும்.
7. உணவை உட்கொள்வதற்கு முன்பாக சிறிது இனிப்பான பழங்களை சாப்பிடுங்கள்.
இனிப்புச் சுவை மண்ணீரலைப் பலப்படுத்தி செரிமானம் சுலபமாக நடைபெற உதவும். அதுவும் இனிப்பான பழங்களை உட்கொள்வது மிகவும் நல்லது. செரிமானம் முறையாக நடைபெறும், உடலுக்குத் தேவையான சத்துக்களும் கிடைக்கும்.
உணவை உட்கொண்ட பின்னர் சோடா, செவனப், பெப்சி, கோலா, டீ, காபி, போன்றவற்றை அருந்தும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அதற்குப் பதிலாக பழங்களைச் சாப்பிடலாம், பழ ஜூஸ், லெமன் ஜூஸ் போன்றவற்றை அளவாக அருந்தலாம். இந்த பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

Post a Comment