ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சி


ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சி. வாழ்க்கை என்பது ஆன்மாக்களுக்கு வழங்கப்படும் பயிற்சியாகும், மரணமில்லா பெருவாழ்வுக்கான பயிற்சியாகத்தான் இந்த உலக வாழ்க்கை கருதப்படுகிறது. அதனால் இந்தப் பூமியில் தோன்றும் ஆன்மாக்கள் தொடக்கத்திலேயே, பூமியின் உயரிய பிறவியான மனிதப் பிறப்பை எடுக்காமல்; ஒரு அறிவு உயிராக தன் வாழ்க்கையை தொடங்குகிறது. பிறப்பு இறப்பு என்பது உயிரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பரிமாணமே ஒழிய, மரணம் என்பது முடிவல்ல.

இன்று மனித வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் தொடக்கத்தில் ஒரு அறிவு ஜீவனான தாவரங்களாக தங்கள் பிறவியை தொடங்கின; அதிலும் தாவரத்தில் மிக சிறிதான புல்லினத்தில் இருந்து. ஒரு அறிவு உடைய தாவரங்களில் அனைத்து வகையான பிறவிகளையும் பிறந்து அனுபவப்பட்டும் பின்பு அடுத்த நிலை பிறப்பான இரு அறிவு உயிராக அதாவது புழு, பூச்சி மற்றும் வண்டுகளாக பிறவி எடுக்கின்றன, இரு அறிவு பயிற்சி முடிந்த பின்பு, மூன்று அறிவு ஜீவனாக பிறவி எடுக்கின்றன. இந்த சுழற்சி இறுதியில் ஆறு அறிவு ஜீவனான மனிதனில் பூர்த்தி அடைகிறது.

மனிதப் பிறவி எடுத்த ஆன்மாக்களுக்கு மட்டுமே மனமான ஆறாவது அறிவு கொடுக்கப்படுகிறது. பகுத்தறிவு கொடுக்கப்பட்டதால் மனிதர்களுக்கு மட்டுமே பாவ புண்ணியக் கணக்குகள் உள்ளன. மனிதர்களைத் தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு சரி தவறு மற்றும் பாவம் புண்ணியம் என்ற எந்த அளவுகோலும் கிடையாது.

மனிதப் பிறவி என்பது விலங்கு பிறப்பின் தொடர்ச்சியாக இருப்பதனால் தான் சில மனிதர்களுக்கு விலங்குகளின் குணம் மீதம் இருக்கிறது. நம்மை சுற்றியே விலங்குகளின் குணமுடைய பல மனிதர்களைப் பார்க்கலாம். அவ்வளவு ஏன் நமக்குக் கூட விலங்குகளின் சில குணங்கள் மிச்சம் இருக்கலாம். விலங்குகளிலிருந்து மனிதப் பிறப்பு எடுத்த ஆன்மாக்கள் அதன் தொடர்ச்சியாக, மனிதனிலும் உயரிய பிறப்பும் எடுக்க வாய்ப்புள்ளது.

முதல் ஐந்து அறிவு வரையில் பல்வேறு பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் எளிதாக தங்களின் பயிற்சியை முடித்து அடுத்த பிறவிக்கு நகர்கின்றன. மனித பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் மட்டுமே, மனதின் இச்சைகளுக்குக் கட்டுப்பட்டு இந்தப் பூமியில் சிக்கிக் கொள்கின்றன. மனிதர்களின் மனம் பக்குவப்படும் வரையில் பிறவிகளும் பிறப்புகளும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

ஆறாவது அறிவில் மனம் வளர தொடங்குவதால் ஏழாவது அறிவு மனதின் வளர்ச்சி நிலையாகத்தான் இருக்கும். இவ்வாறு ஆன்மாக்களுக்கு ஒன்பது அறிவுகள் வரையில் வளரும் ஆற்றல் இருக்கும் என்பது எனது கணிப்பு.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top