தீய எண்ணங்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?
எண்ணங்கள்
0
Comments
தீய எண்ணங்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் தீய சிந்தனைகளும் தீய எண்ணங்களும் உருவாகிக்கொண்டே இருக்கும். ஆண்டி முதல் அரசன் வரை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஒரு மனிதன் எந்த வயதில் எந்த நிலையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவனது மனப்பக்குவ நிலைக்கு ஏற்ப தீய எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
மனிதர்களுக்கு நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் உருவாவது இயற்கையான ஒன்றுதான். இதில் எந்த தவறும் கிடையாது. குறிப்பாக சொல்லப்போனால் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் அந்த எண்ணம் தோன்றும் மனிதருக்கும் எந்த வகையான தொடர்பும் இருப்பதில்லை.
யார் மனதில் என்ன எண்ணம் தோன்ற வேண்டும்? எவ்வாறான எண்ணங்கள், எந்த தன்மையில், எந்த சூழ்நிலையில், தோன்ற வேண்டும்? என்று யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எண்ணங்கள் உருவாவதை தமிழில் “தோன்றும்” என்று தான் கூறுகிறோம். எண்ணங்கள் சுயமாக உருவாகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சுயமாக உருவாக்கும் ஒரு விஷயத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எண்ணங்கள் தோன்றுவது நம் மனதிலாக இருந்தாலும், அந்த எண்ணத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அனுபவிப்பது நாமாக இருந்தாலும், எண்ணங்கள் தோன்றுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
மனிதர்கள் மனதில் பதிவாகி இருக்கும் பதிவுகளை கொண்டு இப்போது அவர்கள் பார்த்து, கேட்டுக் கொண்டிருக்கும், அனுபவித்துக் கொண்டிருக்கும், விஷயங்களை கொண்டு அவர்கள் மனதில் நல்லதாகவோ தீயதாகவோ எண்ணங்கள் உருவாகின்றன.
எண்ணங்களில் இருந்து விடுபடும் வழிமுறைகள்.
மனதில் தோன்றும் எண்ணங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நான் வேறு, எனது மனது வேறு, என்ற தெளிவான சிந்தனை இருந்தால் போதும். மனதில் தோன்றும் என்ற எண்ணமும் சிந்தனையும் நம்மை எந்த வகையிலும் பாதிக்காது.
மனதில் தோன்றும் எண்ணங்கள் மீது நமக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஆனால் தோன்றும் எண்ணத்தின் மூலமாக நாம் எந்த வகையான விளைவுகளை உருவாக்குகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.

Post a Comment