மனம் எனும் குதிரை
மனம் எனும் குதிரை. மனம் என்பது மனிதர்கள் பயணிக்கப் பயன்படுத்தும் குதிரையைப் போன்றது. உங்களின் இலக்கை நோக்கி நீங்கள் விரும்பும் பாதையில் அந்தக் குதிரையைச் செலுத்தலாம், அல்லது வெறுமனே அந்தக் குதிரையின் மீது அமர்ந்துகொண்டு அந்தக் குதிரை பயணிக்கும் பாதையில் நீங்களும் செல்லலாம்.
குதிரை (மனம்) போகும் பாதையில் பயணிப்பது மிகவும் எளிதானது, அத்தைதான் பெரும்பாலான மனிதர்கள் செய்கிறார்கள். குதிரையை (மனதை) உங்கள் தேவைக்கு ஏற்ப செலுத்துவது சற்று சிரமமான காரியம்.
மனம் ஒரு முரட்டுக் குதிரை எவராலும் எளிதில் அதனை அடக்கிவிட முடியாது. ஆனால் யாரெல்லாம் அந்தக் குதிரையை (மனதை) புரிந்துகொண்டு அடக்கி தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள். அவர்களே தாங்கள் விரும்பும் உயரத்தைத் தொடுகிறார்கள், வாழ்க்கையில் வெற்றிப் பெறுகிறார்கள்.
மனம் எனும் குதிரை உங்கள் தேவைக்கு ஏற்ப பயன்பட வேண்டுமானால் முதலில் எங்கே போகிறீர்கள், எது உங்கள் இலக்கு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக பயணிக்க விரும்பும் பாதையை அறிந்துகொள்ள வேண்டும். எங்கே போகிறேன் என்பதை அறியாமல், எங்காவது செல்லவேண்டும் என்று பயணிக்கும் எவரும் எங்கும் போவதில்லை, எதையும் அடைவதில்லை.
பயணத்தின் இலக்கையும், பாதையையும், நோக்கத்தையும் புரிந்துகொண்டு பயணிப்பவர்கள் மட்டுமே வெற்றிகரமாக தங்களின் இலக்கை அடைகிறார்கள்.
